நாட்டின் மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கேய்ன் உள்ளிட்ட 4 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 2 கிலோகிராம் 842 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அன்றைய தினமே யாயவத்தை, பலபொத்த பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மேலும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் சட்டத்தரணி ஊடாக தங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸாரும் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, நேற்று (30) மதியம் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடா புத்கமுவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 1 கிலோகிராம் 14 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 14 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், நேற்று மாலை குருந்தவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் மாவத்தை பகுதியில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில், 1 கிலோகிராம் 8 கிராம் கொக்கேய்னுடன் 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 7 பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
